அரசு டவுன் பேருந்தை நிறுத்திவிட்டு டிரைவர் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து எருமைப்பட்டி, பவித்ரம் வழியாக வேலம்பட்டிக்கு 10 சி என்ற அரசு டவுன் பேருந்து இயக்கப்படுகின்றது. இந்த பேருந்தில் நேற்று முன்தினம் மதியம் 12 மணிக்கு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட இருந்தது. 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் அமர்ந்திருந்தார்கள். அப்போது திடீரென டிரைவர் மணிவண்ணன் தொடர்ந்து நான்கு நாட்கள் பேருந்து இயக்குவதால் உடல்நிலை சரியில்லை. இதனால் பேருந்தை இயக்க மாட்டேன் என கூறிவிட்டு இறங்கிச் சென்று விட்டார்.
இதுகுறித்து கண்டக்டர் ராஜாராம் போக்குவரத்து பணிமனை அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தார். சரவணகுமாரை மாற்று டிரைவராக பேருந்தை இயக்க அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் பேருந்தில் ஒரு மணி நேரமாக காத்திருந்த பயணிகள் ஒருவழியாக நிம்மதி அடைந்து பயணம் மேற்கொண்டார்கள். இருந்தாலும் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போக்குவரத்து பணிமனை அலுவலர்கள் தெரிவித்துள்ளதாவது, முகூர்த்த நாள் என்பதால் பலர் விடுமுறையில் சென்று விட்டார்கள். இதனால் மாற்று ஏற்பாடு செய்ய முடியவில்லை. தற்போது மாற்று டிரைவர் ஏற்பாடு செய்யப்பட்டு பேருந்து இயக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.