புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை விமான நிலையத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
வங்க கடலில் உருவாகி இருக்கும் மாண்டஸ் புயல் காரணமாக விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள். இந்த கூட்டத்திற்கு விமான நிலைய ஆணைய இயக்குனர் சரத்குமார் தலைமை தாங்க அதிகாரிகள் பல பங்கேற்றார்கள். சிறிய ரக விமானங்களை சரியான முறையில் நங்கூரமிடுதல், கடுமையான காற்று, சீரற்ற கால நிலையில் விமானங்கள் நகராதவாறு தரை கையாளும் கருவிகளை பாதுகாப்பாக வைப்பதற்கும் தயார் நிலையில் இருப்பதற்கும் அறிவுரை வழங்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருக்கும் அவசரக்கால அனைத்து குழுக்களும் தயார் நிலையில் வைக்க தீர்மானம் செய்யப்பட்டது. பலத்த காற்றின் காரணமாக செயல்பாடுகள் இடையில் நிறுத்தப்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை விமான நிலையத்திற்கு வெளியே பாதுகாப்பான இடத்திற்கு தங்கள் விமானங்களை மீட்டு வைப்பதற்கான சாத்தியகூறுகள் ஆராய முடிவு செய்யப்பட்டது.