வெள்ள நிவாரணத் தொகை பெற வருகின்ற 15ஆம் தேதி கடைசி நாள் என மயிலாடுதுறை ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகா பகுதிகளில் சென்ற நவம்பர் மாதம் 11-ம் தேதி பெய்த கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்தது. இப்பகுதியை சென்ற நவம்பர் மாதம் 14ஆம் தேதி தமிழக முதல்வர் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாவில் இருக்கும் குடும்பங்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.
இதை அடுத்து 1,61, 647 அட்டைதாரர்களில் 1,53,077 குடும்ப அட்டைதாரர்களுக்கு விரல் ரேகை பதிவு முறையில் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. மீதம் இருக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வருகின்ற 15ஆம் தேதி வரை மட்டுமே நிவாரணத் தொகை வழங்கப்பட இருக்கின்றது. ஆகையால் நிவாரணத் தொகை பெறாதவர்கள் வருகின்ற 15-ஆம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.