வேதாரண்யத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்த உப்பை ஏற்றுமதி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் அருகே இருக்கும் அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்கரை உள்ளிட்ட பகுதிகளில் 9000 ஏக்கரில் உப்பு உற்பத்தி நடக்கின்றது. வடகிழக்கு பருவ மழையால் வேதாரண்யத்தில் தொடர்ந்து மழை பெய்கின்றது. சென்ற ஒரு மாதத்திற்கு முன்பாக உப்பளங்களில் இருக்கும் பாத்திகளில் மழைநீர் தேங்கியதால் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது மாண்டஸ் புயல் எதிரொலியாக கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.
இதனால் இருப்பு வைக்கப்பட்டு இருக்கும் உப்பை ஏற்றுமதி செய்யும் பணியில் உற்பத்தியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு இருக்கின்றனர். இதனால் இருப்பில் இருந்த உப்பை பாக்கெட்டுகளில் அடைக்கும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களும் அந்த உப்பை சாக்கு மூட்டைகளில் அடைத்து லாரிகளில் ஏற்றும் பணியில் தொழிலாளர்களும் ஈடுபட்டார்கள். தற்போது பல்வேறு மாநிலங்களுக்கும் மாவட்டங்களுக்கும் உப்பு ஏற்றுமதி தீவிரமாக நடந்து வருகின்றது. இதன் மூலம் ஏராளமான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கின்றது குறிப்பிடத்தக்கது.