நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் அளிக்கப்படும் என வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.
வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் உதவி பேராசிரியர் பெரியார் ராமசாமி உள்ளிட்டோர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, நிலக்கடலை சாகுபடி 100% மானியத்துடன் செயல்படுத்துவதற்கு வேளாண் அறிவியல் நிலையம் தயாராக இருக்கின்றது. இதற்காக விதைகள், ஜிப்பம், நடமாடும் நீர் தெளிப்பான் என பல இலவசமாக வழங்கப்படுகின்றது.
இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் 1 ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்க வேண்டும். இதில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி, நீடாமங்கலம், கோட்டூர், வலங்கைமான், திருத்துறைப்பூண்டி, கொரடாச்சேரி, முத்துப்பேட்டை, திருவாரூர் உள்ளிட்ட 8 ஒன்றியங்களை சேர்ந்த விவசாயிகள் இதன் மூலம் பயனடையலாம். இத்திட்டத்தில் பயன்பெற உள்ள விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டை நகல், சிறு குறு விவசாயிகள் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஒரிஜினல் நில வரைபடம், குடும்ப அட்டை நகல் உள்ளிட்டவற்றை கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.