வேலூர் அருகே காரின் மீது டேங்கர் லாரி மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளார்கள்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தத்தைச் சேர்ந்த நித்யா, சுரேந்தர், கமலேஷ் உள்ளிட்டோர் காரில் வேலூரை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். அப்போது புதிய பேருந்து நிலையத்தில் உறவினர் ஒருவர் காத்திருந்ததால் அவரை அழைத்துச் செல்வதற்காக மூன்று பேரும் காரில் வந்ததாக சொல்லப்படுகின்றது. இவர்களின் கார் நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாடு இழந்து சாலையின் நடுவில் இருக்கும் தடுப்பு கம்பிகளை இடித்து தள்ளி விட்டு மறுபுறம் சென்றது.
அப்போது எதிரே வந்து கொண்டிருந்த டேங்கர் லாரி எதிர்ப்பாராதமாக காரின் மீது மோதியது. இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தில் நித்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சுரேந்தர் மற்றும் கமலேஷ் உள்ளிட்டோரை அங்கிருந்த வாகன ஓட்டிகள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சுரேந்தர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கமலேஷிற்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இச்சம்பவத்தின் இடையே மாவட்ட ஆட்சியர் வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது விபத்தை கண்டதும் காரில் இருந்து இறங்கி மீட்பு பணியில் ஈடுபட்டார். இதனால் அங்கு போக்குவரத்து உடனடியாக சரி செய்யப்பட்டது.