அவதார் திரைப்படத்தை திரை பிரபலங்கள் பலரும் பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக தெரிவித்து வருகின்றார்கள்.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் சென்ற 2009 ஆம் வருடம் வெளியான திரைப்படம் அவதார். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்தப் படம் 25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட் செலவில் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் 250 கோடி அமெரிக்க டாலர்களை வசூல் செய்தது.
இதுவரை எந்த திரைப்படமும் இந்த வசூல் சாதனையை முறியடித்தது இல்லை. இந்த நிலையில் தற்போது 12 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் பாகம் டிசம்பர் 16ஆம் தேதி வெளியானது. இப்படம் உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியாகி இருக்கின்றது.
இத்திரைப்படம் முன் பதிவில் மட்டுமே பத்து கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்வதாக தகவல் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான அவதார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த நிலையில் திரை பிரபலங்கள் பலரும் படத்தை பார்த்துவிட்டு தங்களின் கருத்துக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றார்கள்.
படம் வெளியான உடனே நடிகர் தனுஷ் இது அவதார் தினம் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். பின்னர் தனுஷ் தனது மகன்கள் லிங்கா மற்றும் யாத்ராவுடன் அவதார் திரைப்படத்தை பார்த்து ரசித்திருக்கின்றார். தனுஷை தொடர்ந்து நடிகர் பிரகாஷ்ராஜும் தனது மகனுடன் படம் பார்த்து ரசித்ததாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும் நடிகரும் இயக்குனாருமான சமுத்திரக்கனி அவதார் புகைப்படத்தை பகிர்ந்து அசுர உழைப்பு அதிருது என பதிவிட்டு இருக்கின்றார். இதுபோல நடிகர் சிம்பு, விஜய் ஆண்டனி என திரை பிரபலங்கள் பலரும் படத்தை பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக தெரிவித்து வருகின்றார்கள்.