பெட்ரோல் நிலைய மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் சிவசேனா கட்சி மாநில செயலாளர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டத்திலுள்ள பழனிச்செட்டிப்பட்டியில் இருக்கும் கொட்டக்குடி ஆற்றுப்பாலம் அருகே பெட்ரோல் விற்பனை நிலையம் இருக்கின்றது. இங்கே மேலாளராக ஹரிங்டன் என்பவர் பணியாற்றும் நிலையில் அவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, நான் மேலாளராக பணியாற்றும் பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு நாட்ராயன், ஸ்டாலின், குரு ஐயப்பன் உள்ளிட்ட மூன்று பேர் வந்து தாங்கள் சிவசேனா கட்சியை சேர்ந்தவர்கள் எனவும் கோவிலுக்கு அன்னதானத்திற்கு நன்கொடை கொடுக்க வேண்டும் எனவும் கட்டாயப்படுத்தினார்கள்.
நான் உரிமையாளரிடம் கேட்க வேண்டும் என கூறியதற்கும் அவர்கள் நான்தான் கொடுக்க வேண்டும் என என்னிடமும் பணியாளர்களிடமும் தகராறில் ஈடுபட்டார்கள். மேலும் ஆபாச வார்த்தைகளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்கள். இது பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு நாட்ராயன், ஸ்டாலின், குரு ஐயப்பன் உள்ளிட்ட மூன்று பேரும் மீதும் வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் குரு ஐயப்பன், ஸ்டாலின் உள்ளிட்ட இரண்டு பேரை கைது செய்தார்கள்.
இதில் குரு ஐயப்பன் சிவசேனா கட்சியில் மாநில செயலாளர் மற்ற இருவரும் அந்த கட்சியின் உறுப்பினர்கள் ஆவர். இதனிடையே நாட்ராயன் என்பவர் விற்பனை நிலைய ஊழியர்கள் தன்னை தாக்கி விட்டதாக பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பாக சாலையில் படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். இதன் பின் அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் சாலையில் படுத்துக்கொண்டு போராட்டம் நடத்திய வீடியோ சோசியல் மீடியாவில் பரவி வருகின்றது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.