நாமக்கலில் வரி செலுத்தாமல் இருக்கும் காலிமனைகளை நகராட்சி தன்வசம் எடுத்துக் கொள்ளும் என ஆணையாளர் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார்.
நகராட்சி ஆணையாளர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, நாமக்கல் நகராட்சி 39 வார்டுகளை கொண்டு இயங்கி வருகின்றது. இதில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சொத்துவரி, தொழில்வரி என அனைத்து வகையிலும் வருடத்திற்கு 23 கோடியே 97 லட்சம் வர வேண்டும்.
ஆனால் இந்த வருடம் இதுவரை 12 கோடியே 37 லட்சம் மட்டுமே வசூலாகி இருக்கின்றது. இதில் நிலுவைத் தொகையாக 11 கோடியே 59 லட்சம் இருக்கின்றது. இதன் காரணமாக நகராட்சியில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் தூய்மை பணியாளர்கள் மற்றும் இதர ஊழியர்களுக்கு மாத வருமானம், முறையான குடிநீர் வினியோகம், குடிநீர் வினியோகத்திற்கான மின்கட்டணம் உள்ளிட்டவற்றை உரிய காலத்தில் வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.
ஆகையால் வருகின்ற 31-ம் தேதிக்குள் நிலுவைத் தொகையினை செலுத்த வேண்டும். 31ஆம் தேதிக்கு மேல் காலிமனை வரி நிலுவையில் இருந்தால் காலி மனைகளை நகராட்சி சட்ட விதிப்படி நகராட்சி தன்வசம் எடுத்துக்கொள்ள சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வரி மற்றும் கட்டணங்களை செலுத்த தவறியவர்களுக்கு குடிநீர் குழாய், பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு செய்யப்படுவதோடு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.