200 கோடிக்கு மேல் மோசடி செய்த தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் மனு அளித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தீபாவளி, பொங்கல் சீட்டு நடத்தி தனியார் நிறுவனம் 200 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக 200-க்கும் மேற்பட்டோர் ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, வந்தவாசி, சேத்துப்பட்டு, செய்யாறு, ஆரணி, கொடுங்கலூர் உள்ளிட்ட ஊர்களில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது இதில் ஏஜெண்டுகள் மூலமாக தீபாவளி மற்றும் பொங்கல் சிறப்புகளில் மக்கள் பணம் செலுத்தினார்கள்.
சென்ற வருடம் வரை பொருட்களை சரியாக கொடுத்து வந்த நிறுவனம் இந்த வருடம் தீபாவளிக்கு தரவில்லை. இதனால் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட போது போலீஸ் சூப்பிரண்டு காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள் என தெரிவித்தார். இதனிடையே நிர்வாகத்தில் இருந்து வேலைக்கு ஆட்கள் குறைவாக இருப்பதன் காரணத்தினால் பொருட்கள் பெற கால தாமதம் ஏற்பட்டதாகவும் தீபாவளி முடிவடைந்ததும் பொருட்கள் தரப்படும் என நிதி நிறுவனம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.
இரண்டு மாதங்கள் ஆகியும் நிறுவனம் தரப்பிலிருந்து எந்தவித சரியான பதிலும் கிடைக்கவில்லை. போலீசில் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் உறவினர் திருமணத்திற்கு செல்வதாக ஐந்து நாட்கள் விடுமுறை தந்து செய்யாறில் இருக்கும் அலுவலகம் வந்தவாசியில் இருக்கும் சூப்பர் மார்க்கெட் உள்ளிட்டவற்றை மூடிவிட்டு உரிமையாளர் ஊழியர்களுடன் சென்றுவிட்டார்.
அவர்கள் இதுவரை திரும்பவில்லை. தொலைபேசியில் அழைத்தும் ஏற்கவில்லை. இதனால் உரிமையாளர் தலைமறைவாகிவிட்டார். மேலும் அவர் பல பகுதிகளில் பினாமி பெயர்களில் சொத்துக்களை வாங்கி குவித்து இருக்கின்றார். தற்போது எங்களிடம் பணம் கொடுத்தவர்கள் பணம் கேட்டு எங்களை மிகவும் தொந்தரவு செய்கின்றார்கள். ஆகையால் நிதி நிறுவன உரிமையாளரை குறித்து அவரிடம் இருக்கும் எங்கள் பணத்தை மீட்டு தர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.