போலீசாரை கண்டித்து டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் 193 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அய்யம்பட்டி தெருவை சேர்ந்த மதன்ராஜ் என்பவர் லோடு வேன் டிரைவராக இருக்கின்றார். இவர் வேனில் விறகுகளை ஏற்றிக் கொண்டு மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் முன்பாக சென்று கொண்டிருந்த போது போலீசார் நிறுத்தி அபராதம் பிடித்ததாக சொல்லப்படுகின்றது. இதை தொடர்ந்து அவர் வேனுக்கு அடியில் படுத்துக்கொண்டு மறியலில் ஈடுபட்டார்.
இதனால் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு செய்ததாக கூறப்பட்டு சப்-இன்ஸ்பெக்டரின் புகாரின் பேரில் போலீசார் மதன் மீது வழக்கு பதிவு செய்தார்கள். இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் லோடு டிரைவர்கள் 193 பேர் திரண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதுபற்றி தகவல் அறிந்த கீதா தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை ஈடுபட்டார்கள். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதை தொடர்ந்து அனுமதி இல்லாமல் சாலையில் அமர்ந்திருந்த 193 லோடு வேன் டிரைவர்களை போலீசார் கைது செய்தார்கள்.