விழுப்புரம் மாவட்டத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி மூலமாக 6200 கர்ப்பிணிகள் பயனடைந்ததாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தாய்மை அடையும் கர்ப்பிணி பெண்களை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு உதவித்தொகையாக வழங்கப்படும் 12 ஆயிரத்தை 18 ஆயிரம் ஆக தமிழக அரசு உயர்த்தி இருக்கின்றது. இதன் மூலம் அவர்கள் தங்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான உணவைப் பெற்று பயனடைய முடியும். மேலும் மகப்பேறு காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் துறையின் சார்பாக ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் குழந்தை பிறந்தவுடன் தாய் சேய் நல பெட்டகம் வழங்கப்படுகின்றது.
மேலும் கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதற்காக சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி தமிழக அரசு சார்பாக நடத்தப்படுகின்றது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு 300 வீதம் இதுவரை 6200 பேருக்கு 18 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு இருக்கின்றது. மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான ஐந்து வகையான சீர்வரிசை மற்றும் ஊட்டச்சத்து உணவுகளும் வழங்கப்பட்டிருக்கின்றது என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.