ராட்சத அலையில் சிக்கிய நான்கு தொழிலாளர்கள் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள ஆண்டவர் குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனத்தில் இரும்பு தகடால் ஆன கூடாரம் அமைக்கும் பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தார்கள். இவர்களில் சுமார் 25 பேர் ராமகிருஷ்ண நகரில் இருக்கும் கடற்கரையை சுற்றி பார்க்க சென்றுள்ளார்கள். இதில் எட்டு பேர் கடலில் இறங்கி குளித்துள்ளார்கள். எட்டு பேரும் அலையில் சிக்கினர். இதில் நான்கு பேர் தப்பித்து கரை வந்தார்கள்.
ஆனால் நான்கு பேர் மட்டும் கடலில் மூழ்கி மயமானார்கள். இதை அடுத்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டார்கள். சென்ற ஞாயிற்றுக்கிழமை காணாமல் போன நிலையில் நேற்று காலை எண்ணூர் கடற்கரை சாலையில் நான்கு தொழிலாளர்களின் உடல்களும் அடுத்தடுத்து சில மணி நேரத்தில் கரை ஒதுங்கியது. இதன் பின் பிரேத பரிசோதனைக்காக அவர்களின் உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் போலீசார் இது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.