சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் இரண்டு ஏக்கர் அளவில் கரும்புகள் சாய்ந்து சேதம் அடைந்தது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சேவூரில் சென்ற இரண்டு நாட்களாக வெயில் அடித்து வந்த நிலையில் அவ்வப்போது சாரல் மழையும் பெய்தது. இதனிடையே சென்ற ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி அளவில் முறியாண்டம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பந்தம் பாளையம் பகுதியில் திடீரென சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆங்காங்கே சிறிய மரக்கிளைகள் உடைந்து விழுந்தது.
இதுபோல அவினாசியப்பன் என்பவருக்கு சொந்தமான 4 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த இரண்டு ஏக்கர் கரும்பு சூறாவளிக்காற்றுக்கு சாய்ந்தது. இது பற்றி அவர் தெரிவித்துள்ளதாவது, கரும்பு இன்னும் மூன்று மாதத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் சூறாவளி காற்றால் சாய்ந்தது. தற்போது சாய்ந்த நிலையில் இருக்கும் கரும்புகளை மூன்று மாதத்திற்கு தண்ணீர் பாய்ச்சி கரும்பு வெட்ட வேண்டும். மேலும் கீழே விழுந்த கரும்புகள் இனி வளர்வதற்கு வாய்ப்பு இல்லை. ஆகையால் வருமான இழப்புதான் என வருத்தத்துடன் தெரிவித்திருக்கின்றார்.