Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கள்ளச்சாராயம் விற்பனை அமோகம் – இதுவரை 949 பேர் கைது; 27,511 லிட்டர் பறிமுதல்!

கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக தமிழகத்தில் இதுவரை 949 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களான மளிகை, காய்கறிகள் மற்றும் மருந்து பொருட்கள் தவிர மற்ற அனைத்து கடைகளுக்கும் மூடப்பட்டுள்ளன. இந்த சூழலில் டாஸ்மாக் கடைகளும், பார்களும் அடைக்கப்பட்டுள்ளதால் மதுப்பிரியர்கள் செய்வதறியாது தவித்து வருகிறார்கள்.

தமிழகம் முழுவதும் போதைக்காக ஷேவிங் லோஷன், வார்னிஷ், மெத்தனால் , கள்ளச்சாராயத்தை குடித்து கிட்டத்தட்ட 10 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது தமிழகத்தில் கள்ளச்சாராயம் தொழில் தலை தூக்கியுள்ளது. அதனை தடுக்க காவல்துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கைது நடவடிக்கை, கள்ளச்சாராயம் பறிமுதல் என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

குறிப்பாக தமிழகத்தில் கள்ளக்குறிச்சியில் தான் அதிகமான கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 25 நாட்களில் தமிழகம் முழுவதும் 27,511 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப்பகுதியில் 21,000 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் கள்ளச்சாராய ஊறல் போட்ட நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கள்ளச்சாராயம் தொடர்பாக தமிழகத்தில் இதுவரை 949 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Categories

Tech |