தமிழகத்தில் 6,132 ஆக இருந்த மதுபான கடைகளின் எண்ணிக்கை 5,152 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக சட்ட பேரவையில் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதம் நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதன் காரணமாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறாமல் சட்ட சபை ஒத்திவைக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து ஜூலை 28ம் தேதி மீண்டும் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற சட்ட பேரவை கூட்டத்தொடரில் மதுவிலக்கு ,மின்சார துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் தங்கமணி, தமிழகத்தில் மதுபான கடைகளின் எண்ணிக்கை 6,132 லிருந்து 5,152 கடைகளாக குறைக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார். மேலும் அனைத்து மதுபான கடைகளையும் உடனடியாக மூடினால் கள்ளச்சாராயம் பெருகும் அபாயம் உள்ளதால் படிப்படியாக குறைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.