Categories
மாநில செய்திகள்

“99 சதவீதம் இந்த வைரஸ் தான் பரவுது”…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

நாடு முழுதும் சென்று சில தினங்களாக மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக மராட்டியம், கேரளா, டெல்லி போன்ற மாநிலங்களில் மீண்டுமாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தமிழகத்தில் பரவாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை தேவை என்று மாவட்ட கலெக்டர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்பே அறிவுறுத்தியிருந்தார். இதையடுத்து தற்போது சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என கூறி மாவட்ட நிர்வாகங்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று கடிதம் எழுதியுள்ளார்.

இந்த நிலையில் தமிழகத்தில் பெரும்பாலும் 99 சதவீதம் பேருக்கு பிஏ2 வகை வைரஸ் தான் பரவுகிறது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியிருப்பதாவது “வண்டலூர் அருகேயுள்ள விஐடி கல்லூரியில் 163 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களை வீடுகளில் தங்கி இருக்க செய்வது, கல்வி நிறுவனத்திற்கு விடுமுறை வழங்குவது ஆகிய நிலைகளை ஏற்படுத்த வேண்டாம். ஏனென்றால் இந்த தொற்று பரவலை நாம் கட்டுப்படுத்தி விடலாம். இருப்பினும் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சமூகஇடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். அந்த வகையில் நான்கு பேர் அமரக்கூடிய மேசை எனில் அதில் 2 பேரும், 6 பேர் அமரக்கூடிய மேசை எனில் 3 பேரும், 8 பேர் அமரக்கூடிய மேசை என்றால் 4 பேரும் உட்கார்ந்து உணவருந்த உத்தரவு பிறப்பித்துள்ளோம்.

ஆகவே கண்டிப்பாக விஐடி கல்லூரியில் கொரோனா கட்டுக்குள் வந்துவிடும். மேலும் உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் விடுதிகளிலுள்ள மாணவர்கள் உணவருந்தும் போதும், கூடும் போதும் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். அத்துடன் மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் இன்றோ, நாளையோ வந்துவிடும். அதேப்போன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் பிஏ2 வகை கொரோனா தொற்றுதான் கண்டறியப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமின்றி சத்திய சாய், சென்னை ஐஐடியில் மாணவர்களுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் பிஏ2 வகை தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

ஆகையால் அண்ணா பல்கலைக்கழகம், சத்திய சாய், சென்னை ஐஐடியில் எடுக்கப்பட்ட பரிசோதனைகள் படி 99 சதவீதம் பேருக்கு பிஏ2 வைரஸ் தான் இருக்கிறது. அதில் ஒருவருக்கு மட்டும் பிஏ3 வகை தொற்று பரவி உள்ளது. இதற்கிடையே நாவலூரில் ஒருவருக்கு பிஏ4 வகை கொரோனா இருந்த சூழ்நிலையில் அவரும் குணமாகி விட்டார். இதனிடையில் ஒமிக்ரான் வகை தொற்றைப் பொறுத்தவரையில் 7 வகை இருக்கிறது. அந்த வகையில் பிஏ1, பிஏ2, பிஏ3, பிஏ4, எக்ஸ்இ உள்ளிட்ட 7 வகையிலான தொற்று இருக்கிறது. தற்போது பெரும்பாலும் 99 சதவீதம் பேருக்கு பிஏ2 வைரஸ் தான் இருக்கிறது. இருப்பினும் மக்கள் அச்சப்பட தேவையில்லை. தமிழ்நாட்டில் விரைவில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துவிடும்” என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |