வேலூரில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 9 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 11 இடங்களில் நிரந்தர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. மேலும் நகர்ப்புற மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இவ்வாறு மாவட்டம் முழுவதிலும் இதுவரை 3 1/2 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மாவட்டத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு 3,200 தடுப்பூசி மருந்துகள் வந்தது.
ஆனால் அந்த தடுப்பூசிகள் அனைத்தும் கடந்த 9-ஆம் தேதியுடன் முடிவடைந்து போனதால் பணி நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில் சென்னையிலிருந்து இந்த மாவட்டத்திற்கு 9 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளது. அதை ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு இன்று (திங்கட்கிழமை) முதல் நிரந்தர தடுப்பூசி முகாம்கள், சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.