மதுரையில் கொரோனா பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தொழிலாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை முல்லை நகரைச் சேர்ந்தவர் முஸ்தபா. 35 வயதான இவர் கேரளாவில் கூலி வேலை பார்த்து வந்தார். கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதையடுத்து முஸ்தபா தனது சொந்த ஊர் திரும்பினார். முஸ்தபா கேரளாவில் இருந்து வந்துள்ளதால் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் போலீசாருக்கும், சுகாதாரத்துறைக்கும் தகவல் அளித்தனர்.
இதையடுத்து சுகாதாரத்துறையினர் விரைந்து வந்து, முஸ்தபா மற்றும் அவரது தாய் இருவரையும் கொரோனா பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்சுக்கு போன் செய்துள்ளனர். ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமானது. இதனால் தாய்-மகன் இருவரையும் சரக்கு வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அங்கு பரிசேதனை செய்யப்பட்டது. இதில் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியானது.
அதைத்தொடர்ந்து இருவரும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனிடையே சரக்கு வாகனத்தில் இருவரையும் அழைத்துச் சென்ற காட்சி சமூக வளைதலங்களில் வேகமாக பரவியது. இதனால் மிகவும் மனவேதனையில் இருந்த முஸ்தபா வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவு எடுத்து, சென்னையில் இருந்து நெல்லைக்கு சென்ற சரக்கு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.