தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 309ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்த 75 பேரில் 74 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2ஆம் இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த இருவருக்கு இன்று காலை கொரோனா தொற்று உறுதியானது. இவர்கள் 2 பேரும் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 309 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் 339 பேருக்கு, கேரளாவில் 286 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 309 ஆக அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதில் 264 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என தெரியவந்துள்ளது. டெல்லி மேற்கு நிஜாமுதீனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தப்லீக் ஜமாத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த மாநாட்டில் கலந்து கொண்ட ஏராளமான நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் நூற்றுக்கணக்கானோர் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கின்றனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே இன்று காலை தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.