அனைத்து மதத் தலைவர்களுடன் இன்று பிற்பகல் 3 மணிக்கு தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா குறித்து மதரீதியாக கருத்துகள் வெளியாவதைத் தவிர்க்க வேண்டுமென வலியுறுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிப்பு தற்போது வரை 309ஆக அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2ஆம் இடத்தில் உள்ளது. மேலும் நேற்று மற்றும் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த 75 பேரில் 74 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதித்த 309பேரில், மொத்தமாக 264 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என தெரியவந்துள்ளது. டெல்லி மேற்கு நிஜாமுதீனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தப்லீக் ஜமாத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து 1,103 பேர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் கலந்து கொண்ட ஏராளமான நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதனால் குறிப்பிட்ட மதத்தினரை மட்டும் குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் பரவி வருகிறது. இதற்கு ஆதரவு, எதிர்ப்பும் கிளம்பி வருவதால் இத்தகைய கடினமான காலகட்டத்தில் மத பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் உருவாகியுள்ளது.
இதனால் மத ரீதியிலான பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால் இந்த கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆலோசனை நடைபெற உள்ளது. இதற்கு அனைத்து மதத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 3 மணிக்கு தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ள நிலையில் இதில் மூத்த அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.