ஹைதராபாத்தில் மருத்துவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, காந்தி மருத்துவமனையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தியா முழுவதும் 27 மாநிலங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பினை தடுக்கும் நடவடிக்கையில் அனைத்து மாநில அரசாங்கங்களும் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தூண்டியுள்ளது.
உயிரிழப்பு 60 ஆக உயர்ந்துள்ளது.இது ஒருபுறம் இருக்க மஹாராஷ்டிரா மாநிலத்தில் நோய் பாதிப்பு தடுப்பு நடவடிக்கைக்காக சென்ற மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் சில மர்ம நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல, ஹைதராபாத்தில் பலவித நோய் அறிகுறிகளுடன் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 49 வயது நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதையடுத்து அந்த நபர் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் சரியான சிகிச்சை வழங்கவில்லை எனக் கூறி அந்த நபரின் உறவினர்கள் காந்தி மருத்துவமனை மருத்துவர்களை தாக்கியுள்ளனர். இதன் காரணமாக காந்தி மருத்துவமனையில் போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வந்து செல்லும் பொதுமக்களை கண்காணித்து வருகின்றன.