கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களை சுட்டுக்கொல்லுங்கள் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
உலக நாட்டு மக்களை கொன்று குவித்து அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சமூக விலகலைஅனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி, பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி இருக்கிறது. மக்கள் ஒன்று கூடுவதை தவிர்த்து, அவர்களை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும், பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் நோயின் தீவிரத்தை உணராமல் ஜாலியாக வெளியில் சுற்றி வருகின்றனர்.
இந்தநிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் ஊரடங்கு உத்தரவை யாராவது மீறும் பட்சத்தில், அந்த நபர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே (Rodrigo Duterte) எச்சரித்துள்ளார். கொரோனா பாதிப்பு குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அதிபர் டுட்டர்டே, ‘ஊரடங்கு உத்தரவுக்கு மக்கள் அனைவருமே ஒத்துழைக்க வேண்டியது மிகவும் அவசியம்.
ஊரடங்கு உத்தரவை மீறி, சுகாதார பணியாளர்கள், மருத்துவர்களுக்கு இடையூறு செய்வது மிகப்பெரிய குற்றமாகும். காவல்துறை மற்றும் ராணுவத்திற்கு என்னுடைய உத்தரவு… ஊரடங்கை மீறும் நபர்களால் உங்களுக்கு சிக்கல் ஏற்பட்டாலோ அல்லது உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலோ, அவர்களை சுட்டுக் கொல்லுங்கள்’ என்று எச்சரிக்கும் விதமாக பேசினார்.
அந்நாட்டில் மணிலாவின் குயிசான் நகரைச் சேர்ந்த குடிசைப்பகுதி மக்கள் தங்களுக்கு அதியாவசியப் பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை எனக் கூறி நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்திய நிலையில், அதிபர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டில் இதுவரை 2,311 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 96 பேர் பலியாகியுள்ளனர்.