கேரளா-கர்நாடக எல்லை தகராறு தொடர்பாக இரு மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுடன் சந்திப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயை அடுத்து கேரளாவிலிருந்து கர்நாடகாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக மக்கள் நடமாட்டத்தை எவ்வாறு எளிதாக்குவது என்று முடிவு செய்யவும் மத்திய சுகாதார செயலாளருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனாவின் தீவிரத்தை தொடர்ந்து அனைத்து மாநிலங்களின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. கேரளாவின் எல்லை மாநிலங்களான கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநில எல்லைகள் மூலம் முற்றிலும் துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால் கேரளாவிற்கு அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பால், மளிகை பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு திண்டாடியது.
மேலும் கர்நாடக எல்லையை ஒட்டி அமைந்துள்ள கேரள மாநிலத்தில் ஒரு பகுதி தான் காசர்கோடு. இங்கு வசிக்கும் மக்கள் பொதுவாக தங்களது தேவைகளுக்கும், மருத்துவ வசதிகளுக்கும் கர்நாடக மாநிலம் மங்களூருக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில், கர்நாடக எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் நோயாளிகள் சிகிச்சைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக இருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அத்தியாவசிய தேவைகளுக்கும், மருத்துவ சேவைகளுக்கும் காசர்கோடு பகுதியில் உள்ள கர்நாடக எல்லையை திறந்துவிட கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.பி. ராஜ்மோகன் உன்னிதன் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, எல்லை தகராறு குறித்து கேரளா கர்நாடக மாநிலத்தின் தலைமை செயலாளர்கள் சந்தித்து ஆலோசனை நடத்த உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, வழக்கு விசாரணையை ஏப்ரல் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.