இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த 4 பேர் மரணமடைந்துள்ளனர். இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,902 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 183 பேர் கொரோனா பதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு: கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விழுப்புரத்தை சேர்ந்த 51 வயது நபர் உயிரிழந்ததாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்த நபர் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான்: இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் 60 வயது மூதாட்டி ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். மேலும் இன்று புதிதாக 19 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜோத்பூரில் மொத்தமாக 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 19 பேரில் 8 பேர் டெல்லியில் தப்லிகி ஜமாஅத் அமைப்பு சார்பில் நடந்த மதக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ராஜஸ்தானில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மொத்தமாக 198 ஆக உள்ளது.
மத்தியப் பிரதேசம்: இதையடுத்து, சிந்த்வாராவில் கொரோனவால் பாதிக்கப்பட்ட 36 வயது மதிக்கப்பதக்க நபர் சிகிச்சை பலனின்றி காலமானார். தற்போது மத்திய பிரதேசம் மாநிலத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம்155 ஆக உள்ளது. இதுவரை 9 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குஜராத்: அகமதாபாத்தில் COVID19 தோற்றால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் காலமானார். இதையடுத்து குஜராத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 10 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 10 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, குஜராத் மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ளது என மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.