ஏப்ரல் 11 செல்லப்பிராணிகள் வளர்ப்பு தினத்தை முன்னிட்டு வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளால் நமக்கு ஆபத்து உண்டாகுமா அல்லது நன்மை உண்டாகுமா என்பது பற்றிய தொகுப்பு
நாம் பசுவை வளர்க்கிறோம் என்றால் கிட்டத்தட்ட நாம் புண்ணியம் பெற்றவராக ஆகின்றோம். ஏனென்றால் பசு தனக்கென்று எதுவும் வைத்துக் கொள்வதில்லை. அனைவருக்கும் கொடுக்கக்கூடியது. தாயில்லா குழந்தைகளுக்கும் உணவு மூலம் தாய் ஆகிறது. பசுவின் முழு உருவத்திலும் முப்பத்து முக்கோடி தேவர்கள், சிவன், பிரம்மா, விஷ்ணு உள்ளிட்ட மூவரும் குடி கொண்டிருப்பதாக ஐதீகம். பசுவின் பின்புறம் லக்ஷ்மி குடி கொண்டிருப்பதாகவும் ஐதீகம். அதனால் தான் அனைவரும் பசுவின் பின்னால் தொட்டு வணங்குகின்றனர்.
ஒரு குடும்பத் தலைவனுக்கோ அல்லது குடும்பத்தில் உள்ளவர்களுக்கோ தீங்கு நடக்குமானால் உடனடியாக கண்டுபிடித்து அந்த பிரச்சனையில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வதற்கு எச்சரிக்கை விடுக்க கூடிய சக்தி இந்த பசுவிற்கு உண்டு. குடும்பத்தில் ஒரு பிரச்சனையோ மரணமோ அல்லது பொருள் இழப்பு அல்லது களவு நடக்க இருந்தால் பசுவின் கண்ணில் இருந்து கண்ணீர் வர ஆரம்பிக்கும். இடது கண்ணில் இருந்து கண்ணீர் வந்தால் உடனடியாக பிரச்சனை வரும் என்று அர்த்தம். வலது கண்ணில் இருந்து கண்ணீர் வடிந்தால் ஒருவாரம் அல்லது பத்து நாளில் பிரச்சனை வரப்போகிறது என்று அர்த்தம்.
இதிலிருந்து நமக்கு ஏதோ தெரிவிக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். வீட்டில் சண்டை நிகழலாம், திடீர் தற்கொலை நிகழலாம் அல்லது பேரிழப்பு ஏதேனும் உண்டாகலாம் என்பதை அந்தப் பசுவின் மூலம் அறிய முடியும். மேலும் தொழுவத்தை விட்டு ஓடினாலும் அல்லது தொழுவத்திற்கு வர மறுக்கிறது என்றால் நில அதிர்வு வரப்போகிறது என்று அர்த்தம்.
அதேபோல நாய் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு ஊளையிட்டால் கண்டிப்பாக யாரோ இறக்கப் போகிறார்கள் என்று அர்த்தம். அதிலும் காலையில் சூரியன் உதிப்பதற்கு முன்னர், பிறகு மதிய உச்சி வேளை, அதன்பிறகு சாயங்காலம், அதற்கடுத்து நள்ளிரவில் என்று தொடர்ந்து ஊளையிட்டால் பெரிய மரணம், திடீர் மரணம் நிகழப் போகிறது என்றும் சொல்லலாம்.
அதேபோன்று பூனை அலறிக்கொண்டு கத்தும் அதுபோல செய்தால் வீட்டில் ஏதோ பாதிப்பு வரப்போகிறது அல்லது விபத்து வரப்போகிறது என்று அர்த்தம். கூட்டுக்குடும்பமாக இருப்பவர்கள் பிரியப் போகிறார்கள் என்றும் அர்த்தம்.
இதுபோல நம் வீட்டிலுள்ள வளர்ப்பு பிராணிகள் நமக்கு ஆபத்து காலங்களில் எச்சரிக்கைதான் கொடுக்கும். எனவே நம் வீட்டில் வளர்க்கும் பிராணிகளால் நமக்கு நன்மையே உண்டாகும்.