Categories
பல்சுவை

தீய சக்திகளை தடுத்து நிறுத்துமா வளர்ப்பு பிராணிகள்…?

ஏப்ரல் 11 செல்லப்பிராணிகள் வளர்ப்பு தினத்தை முன்னிட்டு தீய சக்தியை தடுத்து நிறுத்தும் மீன் நாய் பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகள் பற்றி சாஸ்திரம் கூறும் உண்மை பற்றிய தொகுப்பு

கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று முன்னோர்கள் அழகாக திருஷ்டியை பற்றி விளக்கமாக கூறியுள்ளனர். வீட்டில் குப்பை சேர சேர துர்நாற்றம் வீசும். அது போல தான் கண்திருஷ்டியும் அதிகமாக அதிகமாக பல்வேறு பிரச்சினைகள் குடும்பத்தில் உள்ளவர்களை ஆட்டிப்படைக்கும். இதுபோன்று திருஷ்டியை போக்குவதற்கு பல்வேறு வழிமுறைகளை நம் முன்னோர்கள் கூறினாலும் வீட்டில் வளர்க்கப்படும் வளர்ப்பு பிராணிகள் இவ்வகை கண்திருஷ்டிகளை ஏற்றுக்கொண்டு வளர்ப்பவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக கூறுவர்.

இதனால்தான் அந்த காலத்தில் வீட்டில் அதிகமாக வளர்ப்பு பிராணிகளை வளர்க்க ஆரம்பித்தனர். பூனை முதற்கொண்டு யானை வரை வளர்ப்பு பிராணிகளாக முன்னோர்கள் வளர்த்ததின் காரணமும் இதுதான். அதுமட்டுமின்றி செய்வினை, சூனியம், துர் ஆவிகள், பேய், பிசாசு போன்ற தீய சக்திகளை கண்டறியும் ஆற்றல் வளர்ப்பு பிராணிகளுக்கு உண்டு மேலும் மேற்கண்ட தீய சக்திகளால் விளையும் தீய சக்திகளை தடுத்து நிறுத்தும் சக்தியும் வளர்ப்பு பிராணிகளிடம் உண்டு.

ஒரு சில வீடுகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு பிராணிகள் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் ஆனால் திடீரென இறந்து விடும். இதற்கு காரணம் மிகவும் கொடுமை வாய்ந்த கெடுதலை வளர்த்தவர்க்கு ஏற்படாமல் இருக்க வளர்ப்பு பிராணிகள் ஏற்றுக்கொண்டு அவை மரணத்தை தழுவும். அதாவது தன் உயிரை கொடுத்து வளர்த்தவரை காப்பாற்றும். இவ்வளவு சக்தி வாய்ந்தது நம் வளர்க்கும் பிராணிகள்.

இந்தவகையில் வாஸ்து என பெயரிட்டு மக்களை ஏமாற்றி வரும் வேலைகளும் நடைபெறுகிறது. அதிலும் குறிப்பாக வாஸ்து மீன் வளர்ப்பு எனக்கூறி ஆயிரக்கணக்கில் ஒரு மீனை விற்கின்றனர். இது முற்றிலும் தவறு. தனிப்பட்ட ஒரு விலங்கை அல்லது மீனை எந்த சாஸ்திரமும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. ஓரறிவு ஈரறிவு முதல் ஐந்தறிவு உயிரினங்கள் வரை அனைத்தையும் மனிதன் வளர்க்கலாம் என்று கூறப்படுகிறது.

வளர்ப்பு விலங்குகள் மனிதனுக்கு ஏற்படும் நல்ல மற்றும் தீய பலன்களை அறிந்து கொள்ள நமது முன்னோர்கள் தனி சாஸ்திரங்களை உருவாக்கினார்கள். அவற்றில் முக்கியமான பகுதி மனிதன் ஏன் வீட்டில் விலங்குகளை வளர்க்க வேண்டும் என்பதற்கு தரும் விளக்கங்கள் மிகவும் வியப்புக்குரிய தாக இருக்கிறது. அதில் மிக முக்கியமான கருத்து “ஒரு வீட்டிற்கு வரும் எதிர்பாராத தீயதை தடுப்பதற்காக அந்த தீய சக்தியை தனக்குள் உள்வாங்கிக்கொண்டு வளர்ப்பு மிருகங்கள் இறந்துவிடும்” என்று சாஸ்திர நூல்கள் சொல்கின்றன.

மேலும் மனிதனுக்கு ஏற்படும் திருஷ்டி தோஷங்களை விலங்குகள் தனக்குள் ஈர்த்துக் கொண்டு வளர்பவனுக்கு தாம் துன்பப் பட்டாலும் அரணாக நிற்கும் என்று சொல்லப்படுகின்றது. அந்த வகையில் பார்த்தால் நமது வீடுகளில் வளர்க்கப்படும் விலங்குகள் மற்றும் பறவைகள் அனைத்துமே நமக்கு வருகின்ற துயரத்தை தான் வாங்கிக்கொண்டு வாழ்கின்றனர் அல்லது இறந்து போகின்றன. இந்த நியதிக்கு யானை முதல் பூனே வரை பொருந்தி வரும்.

நாம் வீட்டில் வளர்க்கும் மீன்கள் கூட நமது கஷ்ட நஷ்டங்களை தனக்குள் ஈர்த்துக்கொள்ளும் என்று சொல்லப்படுகிறது. அதன் அடிப்படையில் எந்த வகை மீனை வளர்த்தாலும் அதன் பயன் ஒன்றுதான் என்பது தெளிவானது. தற்போதைய காலகட்டத்தில் நகரமயமாகி வரும் தருணத்தில் கிராமங்களை தவிர்த்து நகரத்தில் ஆடு மாடு குதிரை யானை போன்றவற்றை வளர்ப்பது சாத்தியமில்லை. ஆனால் மீன் வளர்ப்பது என்பது அனைவராலும் முடியும்.

வாஸ்து மீன் தான் வளர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை எந்த வகை மீனையும் வளர்க்கலாம். குறிப்பாக வண்ண மீன்கள் பல வண்ணங்களில் வளர்க்கலாம். இடவசதி இருந்தால் கூடுதலாக பூனை நாய் போன்றவற்றையும் வளர்க்கலாம். இது போன்றவற்றை வளர்க்கும் பொழுது மனிதர்களுக்கு கெட்ட சக்திகள் இருந்து விடுதலை கிடைப்பதுடன் வளர்ப்பு பிராணிகள் காட்டும் அன்பால் மனிதர்களுக்கு மனச்சோர்வும் நீங்கும்.

குழப்பமான மனநிலையில் இருக்கும் பொழுது குழந்தைகளுடனும் வளர்ப்புப் பிராணிகளுடனும் சிறிது நேரம் விளையாடினால்  மனம் தெளிவுபெறும் என்பது பல்வேறு ஆராய்ச்சிகளில் நிரூபித்துள்ள ஒன்று. குடும்பத்தில் தொடர் பிரச்சினைகளை சந்திப்பவர்கள் ஏதேனும் ஒரு வளர்ப்பு பிராணியை வளர்த்துப் பாருங்கள் மிக விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும்.

Categories

Tech |