கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டே வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு (இந்தியா) முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு துறைகள் முடங்கி கிடக்கின்றன. மேலும் நாட்டு மக்கள் அனைவரும் வேலைக்கு எங்கும் வெளியே செல்ல முடியாமல் வருமானமின்றி பாதிப்படைந்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக திரைத்துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் படப்பிடிப்பு அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ள காரணத்தினால், வறுமையில் சிக்கித் தவித்துவருகின்றனர். ஆகவே அவர்களுக்கும், அவர்களது குடும்பதினருக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் திரைத்துறையினர் உதவ முன்வர வேண்டும் என்று ஃபெப்சி சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணி வேண்டுகோள் விடுத்திருந்தார் .
அந்த வேண்டுகோளை ஏற்று, தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா ஃபெப்சி தொழிலாளர்களுக்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவியாக வழங்கியுள்ளார்.
இதேபோல் முன்னதாக தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சூர்யா- கார்த்தி, வெற்றிமாறன், பார்த்திபன் உள்ளிட்ட பல நடிகர்களும் நிதியுதவி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.