டெல்லி மர்கஸ் மசூதியில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்ட சுமார் 2300 பேரில், 500 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இன்று காணொலி மூலம் மக்களிடம் பேசிய அவர், மீதமுள்ள 1800 பேர் தனிமைப்படுத்தலில் இருக்கிறார்கள் என கூறினார். அவர்கள் அனைவரையும் நாங்கள் சோதித்து வருகிறோம் என்றும், அவற்றின் முடிவுகள் 2-3 நாட்களில் வரும் எனவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனக் கூறியுள்ளார். டெல்லியில் அனுமதிக்கப்பட்டுள்ள COVID19 நோயாளிகளில் 11 பேர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் (ஐ.சி.யு) அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் வென்டிலேட்டர்கள் உதவியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் அனைவரும் நல்ல நிலையில் உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், டெல்லியில் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ள 445 பேரில் 40 பேருக்கு மட்டும் தொற்று உள்ளூரில் பரவியுள்ளது. மீதமுள்ளவர்கள் வெளிநாடு பயணம் மேற்கொண்டவர்கள் மற்றும் மதக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் ஆவர். எனவே, டெல்லியில் தொற்று நோய் புதிதாக யாருக்கும் பரவில்லை என்பதும் நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதும் நம்பிக்கை தரக்கூடிய விஷயம் என கூறினார்.