தமிழகஅரசு கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி, ஏப்ரல் 14 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் துபாய் சென்று திரும்பிய ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு நெல்லை திரும்பிய 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நெல்லையில் இதுவரை கொரோனா தொற்றல் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30ஆக இருக்கிறது.
இந்நிலையில், வேகமாக பரவி வரும் கொரோனாவின் ஆபத்தை உணராமலும், 144 தடை உத்தரவை மீறியும் பாளையங்கோட்டையில் வயல்வெளி பகுதியில் மரத்துக்கு அடியில் இளைஞர்கள் 8 பேர் கூட்டாகச் சேர்ந்து உணவு சமைத்து சாப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக பாளையங்கோட்டை காவல் துறையினர், அந்த 8 இளைஞர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.