இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிப்புக்குள்ளானவர்களில் 42 சதவீதம் பேர் 21 வயது முதல் 40 வயது வரை உள்ள வரம்புக்கு உட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது இதுவரை இந்தியாவில் கொரோனா வைரசால் 1,374 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 77 பேர் உயிரிழந்த நிலையில் 267 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில் மத்திய நல்வாழ்வு துறை இணைச் செயலர் லவ் அகர்வால் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 42 சதவீதம் பேர் 21 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் என தெரிவித்தார்.
அதேபோல் கொரோனா நோயாளிகளில் 17 சதவீதம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் 9 சதவீதம் பேர் 20 வயதுக்கும் குறைவானவர்கள் என்றும் அவர் கூறினார்.
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 60 வயதுக்கும் குறைவானவர்களின் விகிதம் 83 சதவீதமாகும் எனவும் அவர் தெரிவித்தார். மொத்த நோயாளிகளில் 30 விழுக்காட்டினர் டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களும், அவர்களின் தொடர்பில் இருந்தவர்களும் தான் எனவும் அவர் குறிப்பிட்டார்.