கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 70 பேரை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார். மேலும் அதில் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் இன்று மாலைக்குள் அவர்களை கண்டுபிடித்து விடுவோம் என உறுதி பட தெரிவித்துள்ளார்.
அதேபோல டெல்லி அரசாங்கத்திற்கு 27,000 பிபிஇ கிட்களை தருவதாக மத்திய அரசு கூறியிருந்தது. நேற்று வரை நாங்கள் அதைப் பெறவில்லை, ஓரிரு நாட்களுக்கும் மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் வந்துவிடும் என கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 4,067ஆக அதிகரித்துள்ளது. கடந்த 12 மணி நேரத்தில் 490 பேருக்கு கொரோனா அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4067 ஆக உள்ளது. அதில் 3666 தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் 292 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில், மொத்தம் 503 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.