மக்களைத் துன்புறுத்த வேண்டும் என்பது அரசின் நோக்கம் அல்ல, மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார், அப்போது அவர் பேசுகையில், “மத்திய அரசிடம் இருந்து முதற்கட்டமாக ரூ.500 கோடி வந்துள்ளது. பல்வேறு தொழிலாளர் நல வாரியங்களில் உள்ளவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும். அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே ரூ 1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது” என்றார்.
மேலும் காவல் துறையினரின் கஷ்டத்தை மக்கள் புரிந்துகொண்டு ஒத்துழைக்க வேண்டும். மக்களைத் துன்புறுத்த வேண்டும் என்பது அரசின் நோக்கம் அல்ல. மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனா நோயை ஒழிக்க முடியும். அரசு சட்டம் பிறப்பித்துள்ளத்தை நடைமுறைப்படுத்துவது மக்களின் கையில்தான் உள்ளது. கொரானாவின் தாக்கம் குறைய தனிமைப் படுத்திக் கொள்வது மட்டுமே தீர்வு. வெளிநாடு சென்று இருந்தாலும், மாநாடு சென்றாலும் அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.