நேற்று இரவு தீபஒளி ஏற்றும் சமயத்தில் வானை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தியதற்காக பல்ராம்பூர் பாஜக மகளிரணி தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசுக்கு எதிரான மக்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் விதமாக நேற்று இரவு 9 மணிக்கு வீடுகளில் உள்ள மின் விளக்குகளை அனைத்துவிட்டு, அகல் விளக்கு, மெழுகுவர்த்தி மற்றும் மொபைல் விளக்குகளை 9 நிமிடங்கள் ஏந்த பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருந்தார்.
அதன்படி, நேற்று இரவு 9 மணிக்கு, நாட்டின் பல இடங்களில் மக்கள் வீடுகளில் மின் விளக்கை அனைத்து விட்டு, விளக்குகளை ஏற்றினர். மேலும், கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவ பணியாளர்களுக்கு அவர்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர். குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர், மாநில முதல்வர்கள் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தீபங்களை ஏற்றி தங்களது நன்றியை தெரிவித்தனர்.
இதை நிலையில், பல்ராம்புரை சேர்ந்த பாஜக மகளிரணி தலைவர் மஞ்சு திவாரி நேற்று இரவு 9 மணியளவில் காற்றில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய அவர், நேற்று 9 மணியளவில் முழு நகரமும் தீப ஒளியில் கண்டதால் மகிழ்ச்சியில் தீபாவளியை போல உணர்ந்தேன். எனவே, வானை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தினேன். எனது தவறை நான் ஏற்றுக்கொள்கிறேன், அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.