பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தற்போது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி இன்று ஃபேர்வியூ குப்கர் சாலையில் உள்ள தனது இல்லத்திற்கு மாற்றப்பட உள்ளார். மேலும் அவர் தொடர்ந்து வீட்டுக் காவலில் இருப்பார் எனவும், அவரது உத்தியோகபூர்வ இல்லத்தை ‘துணை சிறை’ என்று உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் காஷ்மீர் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை கடந்த வருடம் ஆகஸ்ட் 5-ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்த மத்திய அரசு, லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகியவற்றை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து அறிவித்தது. மேலும் கடந்த ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
இதையடுத்து, முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். அதன்பின் இவர்கள் 3 பேரும், பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் அறிவித்தது. நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில் தன்னை பங்கேற்க விடாமல் மத்திய அரசு வீட்டுக்காவலில் வைத்துள்ளதாக பரூக் அப்துல்லா குற்றம் சாட்டினார்.
மேலும் காங்கிரஸ் எம்.பி.சசிதரூர் எழுதிய கடிதத்துக்கும் பரூக் அப்துல்லா பதில் கடிதம் எழுதி இருந்தார். அதை சசிதரூர் வெளியிட்டார். இந்தநிலையில், பரூக் அப்துல்லாவின் தடுப்புக் காவலை நீக்கியும், அவரை விடுவித்தும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் கடந்த மார்ச் மாதம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் மெகபூபா முப்தி மற்றும் உமர் அப்துல்லாவையும் கோரி பல்வேறு கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.