மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வருகிறது. இந்த கொடிய கொரோனா இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக வேகமாக பரவ தொடங்கி விட்டது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்தியாவில் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
இந்தியாவில் மகாராஷ்டிரா தான் அதிக பாதிப்பை சந்தித்துள்ள மாநிலத்தில் முதலிடம் வகிக்கிறது. அங்கு நாள்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது. இந்த நிலையில் தற்போது மகாராஷ்டிராவில் மேலும் 150 பேர் கொரோனோ வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,018 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசால் மொத்தம் 4,789 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 124 பேர் பலியாகியுள்ள நிலையில், 353 பேர் குணமடைந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.