76 நாட்களுக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதால் வூஹான் நகரில் இருந்த மக்கள் தங்கள் மாகாணங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் 14 லட்சத்து 23 ஆயிரத்து 738 பேருக்கு பரவி 10 லட்சத்து 40 ஆயிரத்து 252 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 47 ஆயிரத்து 911 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களில் 3 லட்சத்து 1628 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்த வைரஸின் தாக்கத்தால் உலக அளவில் 81 ஆயிரத்து 858 பேர் மரணமடைந்துள்ளனர். சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் இருக்கும் வூஹான் நகரில் தான் இந்த கொடிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்தே உலகமுழுவதும் பரவத்தொடங்கியது. டிசம்பர் மாதமே இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டாலும் இதன் வீரியத்தை உணர்ந்த பின்பே சீன அரசு அந்நகருக்கு ஊரடங்கு உத்தரவை அமல் படுத்தியது.
அதிக அளவு பரவுவதை தடுக்க நகரம் முழுவதும் சீல் வைக்கப்பட்டு ஒரு கோடியே 10 லட்சம் மக்கள் தனிமைப்படுத்தப் பட்டனர். மற்ற மாகாணங்களில் இருந்து வூஹான் நகருக்கு போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டது. வீட்டை விட்டு வெளியே வர கடுமையான தடைவிதிக்கப்பட்டதன் காரணமாக வைரஸ் பரவுவது வெகுவாகக் குறைந்தது. இருந்தபோதிலும் சீனாவில் 81 ஆயிரத்து 740 பேருக்கு கொரோனா பரவியது அதில் 3331 பேர் மரணித்துள்ளனர்.
தற்போது 1242 பேர் சிகிச்சை பெற்று வருவதோடு அதில் 211 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்து வருகிறது. ஆனால் 77 ஆயிரத்து 167 பேர் சிகிச்சைக்குப்பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் கொரோனா கட்டுக்குள் வந்து உயிரிழப்பும் குறைந்து யாருக்கும் வைரஸ் பரவாத நிலையில் சீனாவின் நிலைமை சீரடைந்து வருகிறது. இதனால் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவை நேற்று சீன அரசு தளர்த்தி போக்குவரத்து சேவைகளையும் தொடங்கியுள்ளது.
ரயில் சேவைகள் தொடங்கப்பட்டதை தொடர்ந்து கொரோனா வைரஸ் காரணமாக அச்சத்தில் இருந்த வூஹான் நகரின் மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நகரத்தை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர். வூஹானில் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டதும் ரயில் நிலையங்களில் நிலையங்களில் குவிந்த மக்கள் கூட்டம் பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட மாகாணங்களுக்கு இடம் மாறிய வண்ணம் உள்ளனர். இதனால் ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் அதிக அளவில் கூட்டம் குவிந்து வருகிறது.