நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று காலை ஆலோசனை நடத்தினார். இதில் திமுக சார்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற குளுத் தலைவர் டி.ஆர். பாலு, அதிமுக சார்பில் நவநீதகிருஷ்ணன் காணொலி மூலம் ஆலோசனையில் பங்கேற்றனர்.
இந்த நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த நவநீதகிருஷ்ணன், தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை கூடுகிறது என்பதை ஆலோசனையில் கூறினேன் என தெரிவித்துள்ளார். மருத்துவ, பொருளாதார ரீதியாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து பிரதமர் விளக்கமளித்தார் என தெரிவித்த அவர், பிரதமர் மோடிக்கு நிதியுதவி கோரி தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். துறை ரீதியாக தனித்தனியாக உதவி கேட்ட கடிதம் அனுப்பியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பிரதமர் மோடி உணவு கூட உட்கொள்ளாமல் பணியாற்றியது தெரியவந்துள்ளது
என நவநீதகிருஷ்ணன் கூறியுள்ளார். முன்னதாக இந்த ஆலோசனை குறித்து பேசிய டி.ஆர்.பாலு, கொரோனா தடுப்பு நடவடிக்கையில் கருத்து வேறுபாடுகளை மறந்து மத்திய, மாநில அரசுகள் பணியாற்ற கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். நடுத்தர குடும்பத்தினருக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கவும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.