ஈகுவடாரில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை உறவினர்கள் வீதியில் வீசும் நிலை உருவாகியுள்ளது.
தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான ஈகுவடார் கடந்த சில தினங்களாக அதிக அளவிலான கொரோனா தாக்கத்தை கண்டுள்ளது. அதிலும் குறிப்பாக அந்த நாட்டின் துறைமுக நகரான குய்யாகு பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நகரில் மட்டும் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றின் காரணமாக தனிமைப்படுத்த பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போதிய மருத்துவ சிகிச்சை அவர்களுக்கு கிடைக்காத நிலையும் ஏற்பட்டுள்ளது. அத்துடன் குய்யாகுவில் பலியானோர் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்து இறந்தவர்களை அடக்கம் செய்ய முடியாத சூழலும் உருவாகியுள்ளது.
இதன் காரணமாக கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்களும் குடும்பத்தினரும் சாலையில் வீசி வருகின்றனர். அல்லது உடலை வீட்டு வாசல் முன்பாக வைத்துவிட்டு போர்வையால் மூடியுள்ளனர். கடந்த இரண்டு தினங்களில் மட்டும் 100 சடலங்களை நகர துப்புரவு பணியாளர்கள் மீட்டெடுத்துள்ளனர். இதனை விடக் கொடுமையானது மருத்துவமனை ஒன்றும் இறந்தவரின் சடலத்தை மனிதாபிமானம் இன்றி தெருவில் வீசியுள்ளது.
இதனை தொடர்ந்து நகர நிர்வாகம் வீடுகளில் இறந்தவர்களின் உடலை கனமான அட்டைகளை பெட்டியாக தயார்செய்து அதற்குள் போட்டு தெருவில் வையுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் மருத்துவமனைகளுக்கு அதிக அளவு உடல்களை சேகரித்து வைக்க 40 அடி நீளம் கொண்ட இரும்பு பெட்டியையும் வழங்கி உள்ளது.