கொரோனா வைரஸ் எதிரொலியால் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொடு வருகின்றது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக மாநில அரசாங்கம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. குறிப்பாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை, 144 தடை உத்தரவு, போக்குவரத்து சேவை நிறுத்தம், மக்கள் வெளியே வர தடை என ஏராளமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
அதைத்தொடர்ந்து ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாள் முழு ஊரடங்கு என்று மத்திய அரசு அறிவித்தது. இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு நடைபெறவிருந்த தேர்வு முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. அத்தியாவசியத் தேவைகளை தவிர ஏனைய அனைத்தும் நிறுத்தப்பட்டது. அந்த வகையில் தான் ஏப்ரல் 27 ஆம் தேதி வரை திருவாரூர் மத்திய பல்கலை கழகம் விடுமுறை அறிவித்திருந்தது.
இன்றுவரை கொரோனா வைரஸ் தாக்கம் குறையாமல் அதிகரித்தே வருவதாலும், ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் இருப்பதாலும் நடைபெற இருந்த பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்திவைக்கப்படுகிறது என்று பல்கலைக்கழக பதிவாளர் புவனேஸ்வரி அறிவித்துள்ளார். மேலும் பல்கலைக்கழகம் திறக்கும் தேதி குறித்தும், தேர்வின் தேதி குறித்தும் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.