“மக்களை காப்பாற்றுவதே நோக்கம் குற்றம்சாட்டுவோர் பற்றி கவலை இல்லை” என ட்ரம்ப் எச்சரிக்கைக்கு உலக சுகாதார மையம் பதிலடி கொடுத்துள்ளது.
கொரோனா விவகாரத்தை அரசியல் ஆக்கினால் பிணக்குவியல்களை காண நேரிடும் எனவும் உலக சுகாதார மையம், அமெரிக்க அதிபர் டிரம்புக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 88,543 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,519,442 ஆக உள்ளது.
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 330,890 லட்சம் ஆக உள்ளது. இந்த நிலையில் அதிகம் பதித்த நாடுகள் பட்டியலில் அமெரிக்காதான் முதல் இடத்தில் இருக்கிறது. இன்றைய நிலவரப்படி அமெரிக்காவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,34,791, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24,058 மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,802 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் திணறி வருகின்றன. இந்நிலையில் நேற்று வாஷிங்டனில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், “உலக சுகாதார அமைப்பு அமெரிக்காவிடமிருந்து பெரும்பான்மையான நிதியைப் பெறுவதாகவும், ஆனால் பல விஷயங்களில் அவர்கள் தவறாகவே பேசியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அதேபோல, உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவே தோன்றுகிறது. அந்த அமைப்புக்கு அமெரிக்கா வழங்கும் நிதியை நிறுத்தப் போவதாக“ எச்சரித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கொரோனா விவகாரத்தை அரசியல் ஆக்கினால் பிணக்குவியல்களை காண நேரிடும் என மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.