தமிழகத்தில் 738 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் மேலும் 344 பேரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளன என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று தற்போது 2ம் நிலையில் இருக்கும் நிலையில், இனி வரும் காலங்களில் 3ஆம் நிலைக்கு செல்ல வாய்ப்பு உள்ளதாக தெரிவித்த அவர், கொரோனாவின் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என தகவல் அளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா ஒருங்கிணைப்புக்குழு சிறப்பாக பணியாற்றி வருகிறது என்றும் கொரோனா சிகிச்சைக்கு 137 தனியார் மருத்துவ கல்லூரி, மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கொரோனா பரிசோதனை செய்ய 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்பட உள்ளது. அதில் 50 ஆயிரம் கருவிகள் இன்று வந்துவிடும் என்றும் 3,370 செயற்கை சுவாச கருவிகள் கையிருப்பில் உள்ளன என்றும் முதல்வர் தகவல் அளித்துள்ளார்.
தமிழகத்தில் 96.30 சதவீதம் பேருக்கு கொரோனா நிவாரண தொகை ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது என தகவல் அளித்துள்ளார் அவர் கொரோனா தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள் ரூ.100 கூட நிதியாக வழங்கலாம் என வலியுறுத்தியுள்ளார். மேலும் சென்னையில் பணியின்போது உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். 12 நலவாரியங்களில் உள்ள 8.20 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.