10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா? இல்லையா? என மாணவர்கள் குழம்பி வரும் நிலையில் இது தொடர்பாக தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஏப்., 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டு அத்தியாவசிய கடைகள் தவிர அனைத்தும் மூடப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு 10,12ம் வகுப்புகளை தவிர பிற வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
மேலும் மே மாதத்தில் நடைபெற இருந்த அனைத்து அண்ணா பல்கலைகழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் 12ம் வகுப்பு தேர்வு நிறைவடைந்துள்ளது. இதனால் 10ம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படுமா? இல்லையா? என கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.
இதனிடையே 10 நாட்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தி முடிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாகவும், மே மாதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது என தகவல் வெளியானது. மேலும் கொரோனா பாதித்த பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களை மாற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும், பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
இதுகுறித்து இன்று காலை விளக்கம் அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தலாமா? வேண்டாமா? என்பது குறித்து ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு முடிவெடுத்து, அந்த தகவலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பார் என்றும் கூறினார். தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் பழனிசாமி, பொதுத்தேர்வை ரத்து செய்வதற்கு வாய்ப்பில்லை என கூறியுள்ளார். மேலும் 10ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதவேண்டியது அவசியம் என்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.