தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இருப்பினும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்வதால் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். நாள்தோறும் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் 48 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 738 ஆக இருந்தது.
இந்த நிலையில் தற்போது சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் மேலும் புதிதாக 96 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 96 பேரில் 84 பேர் டெல்லி சென்று திரும்பியவர்கள் என்றார்.
மேலும் தொடர்ந்த அவர், தமிழகத்தில் இதுவரை 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் தமிழகத்தில் இதுவரை 7,267 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார் . இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738ல் இருந்து 834 ஆக அதிகரித்துள்ளது என்றார்.