கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களை தனிமைப்படுத்தும் வார்டுகளாக மட்டுமே ரயில் பெட்டிகள் பயன்படுத்தப்படும் என உயர்நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது வரை 5,000க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற எதற்கும் வெளியே வரவேண்டாம் என கூறப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே வருகிற ஏப்ரல் 14ம் தேதி வரை கொரோனா பரவலை தடுப்பதற்காக அனைத்து பயணிகள் ரயிலையும் ரத்து செய்துள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ரயில்வே பெட்டிகளை தனிமை வார்டுகளாக மாற்றித் தர இந்திய ரயில்வே முன்வந்துள்ளது. அதற்கு மத்திய அரசும் அனுமதி அளித்தது.
அதன்படி நாடு முழுவதும் கொரோனா சிகிச்சைக்காக 2,500 ரயில் பெட்டிகளில் 40 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் ஏசி அல்லாத படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் மாற்றங்களை கொண்டு வர ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. ரயிலில் உள்ள கழிவறையை குளியலறையாக மாற்றி உள்ளனர்.
இந்த நிலையில் ரயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சை வார்டாக மாற்றுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு ஏப்., 7ம் தேதி விசாணைக்கு வந்த நிலையில் இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், கொரோனா தொற்று ஆரம்ப கட்ட அறிகுறிகள் உள்ளவர்களை தனிமைப்படுத்தும் வார்டுகளாக மட்டுமே ரயில் பெட்டிகள் பயன்படுத்தப்படும் என தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. மேலும் மருத்துவமனையில் இடம் பற்றாக்குறை ஏற்பட்ட பிறகே ரயில்பெட்டிகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் அளித்துள்ளது.