உலகில் சிறந்த கிரிக்கெட் வீரர் என கௌரவித்து விஸ்டன் பட்டம் பெற இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
கிரிக்கெட்டின் பைபிள் என வர்ணிக்கப்படும் லிஸ்டன் புத்தகம் வருடம்தோறும் உலகின் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்ந்தெடுத்து கௌரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக இங்கிலாந்து அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தேர்வாகியுள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த பென் ஸ்டோக்ஸ் அதே ஆண்டில் நடத்தப்பட்ட ஆஷஸ் டெஸ்ட் போட்டித் தொடரிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 135 ரன் குவித்து இங்கிலாந்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார்.
இவரது இந்த இரண்டு சிறப்பான ஆட்டங்களும் இந்த கௌரவத்தை அவருக்கு தேடிக் கொடுத்துள்ளது. இங்கிலாந்தில் ஆன்ட்ரூ பிளின்டாப்க்கு பிறகு விஸ்டன் பட்டத்தை பெறுபவர் பென் ஸ்டோக்ஸ். இந்த ஆண்டு பென் ஸ்டோக்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த பட்டத்தை அலங்கரித்து வந்த விராட் கோலியின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது.