சர்வதேச நாடுகளின் 70% மருந்து தேவையை இந்தியா பூர்த்தி செய்கிறது என இந்திய மருந்து நிறுவனங்கள் கூட்டமைப்பின் பொது செயலாளர் தெரிவித்துள்ளார்
ஹைட்ராக்ஸிக்கிலோராக்குயின் மருந்தை ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு விலக்கிக் கொண்டது. மோடியின் இந்த செயலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்க அமெரிக்காவுக்கு இந்தியா மனிதாபிமானத்துடன் உதவி செய்துள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஹைட்ராக்ஸிக்கிலோராக்குயின் தயாரிப்பதில் இந்தியா சர்வதேச அளவில் முன்னணி வகிக்கிறது. அமெரிக்காவின் நியூயார்க்கில் 1500 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் ஹைட்ராக்ஸிக்கிலோராக்குயின் மருந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றுவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அம்மருந்துக்கு அமெரிக்க உணவு மற்றும் மருத்துவ நிர்வாகம் அனுமதி கொடுத்துள்ளது.
அமெரிக்காவில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஹைட்ராக்ஸிக்கிலோராக்குயின் கொரோனாவால் ஏற்படும் மரணத்தை தடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் மலேரியாவை குணப்படுத்தும் மருந்து எனவும் கொரோனா பாதிப்பை சரிசெய்ய முடியாது எனவும் சிலர் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த மருந்து கொரோனாவால் ஏற்படும் மரணத்திலிருந்து தற்காத்துக்கொள்ள உதவுகிறது என தெரியவந்துள்ளது .
சர்வதேச நாடுகளின் 70% ஹைட்ராக்ஸிக்கிலோராக்குயின் தேவையை இந்தியா பூர்த்தி செய்வதாக இந்திய மருத்துவ நிறுவனங்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுதர்ஷன் ஜெயின் தெரிவித்துள்ளார். உள்நாட்டில் அதிக தேவை ஏற்படும் நிலையில் ஏற்றுமதி செய்வது தவறான செயல் என சிலர் விமர்சித்தும் வருகின்றனர். இதற்க்கு பதில் அளிக்கும் வகையில் தேவையான அளவு மருந்து இருப்பு உள்ளதாகவும், தட்டுப்பாடுகள் இல்லை எனவும் ராஜஸ்தான், ஒடிசா, கேரளம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மருந்து கட்டுப்பாட்டு அலுவலர்கள் தெரியப்படுத்தியுள்ளனர்.