Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 1,30,000 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது: இந்திய மருத்துவ கவுன்சில்

மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்பநலத்துறை அமைச்சக அதிகாரிகள் மட்டும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டனர். அப்போது பேசிய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால், ” கடந்த 24 அணி நேரத்தில் நாடு முழுவதும் 549 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 5734 ஆக உயர்ந்துள்ளது.

அதில், 5095 பேர் சிகிச்சை பெரு வருகின்றனர். 473 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 166 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 17 பேர் உயிரிழந்துள்ளனர்” என்று கூறினார். ” ஹரியானா மாநிலத்தின் கர்னால் பகுதியில் ‘ஒரு குடும்பத்தை தத்தெடுப்போம்’ என்ற திட்டத்தின் கீழ், சுமார் 13000 ஏழை குடும்பங்களுக்கு ரூ.64 லட்சம் வரை உதவி வழங்கப்படுகிறது” என்றும் தெரிவித்தார்.

மேலும், ” பிபிஇ, முகமூடிகள் மற்றும் வென்டிலேட்டர்களின் சப்ளை தற்போது தொடங்கியுள்ளது. இந்தியாவில் 20 உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பிபிஇ கருவிகளை தயாரிக்கின்றனர். சுமார் ரூ.1.7 கோடி மதிப்பில் பிபிஇ கருவிகளுக்கான ஆர்டர்கள் பெறப்பட்டுள்ளதாகவும் மற்றும் அதற்கான விநியோகம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். 49,000 வென்டிலேட்டர்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது” என அவர் கூறியுள்ளார்.

அதேபோல, ரயில்வே சார்பில் இதுவரை 2,500 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் 35,000 துணை மருத்துவ ஊழியர்கள் பணியில் உள்ளனர். அவர்கள், 586 சுகாதார பிரிவுகள், 45 துணை பிரிவு மருத்துவமனைகள், 56 பிரதேச மருத்துவமனைகள், 8 உற்பத்தி பிரிவு மருத்துவமனைகள் மற்றும் 16 மண்டல மருத்துவமனைகள் ஆகியவற்றில் மருத்துவ சேவைகளை அளித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், 80,000 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளைத் தயாரிப்பதற்காக, இந்திய ரயில்வே சார்பில் சுமார் 5,000 ரயில் பெட்டிகள் தனிமைப்படுத்தும் பிரிவுகளாக மாற்றப்படுகிறது. அவற்றில் 3,250 பெட்டிகள் தற்போது தனிமைப்படுத்தப்பட்ட பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன என இணை அமைச்சர் கூறியுள்ளார். இதையடுத்து பேசிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை அதிகாரி, ” இந்தியாவில், இதுவரை 1,30,000 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

அதில் 5,734 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் 3-லிருந்து 5% வரை மக்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு கணிசமாக அதிகரிக்கவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்துள்ளது. இதையடுத்து, நேற்று நாங்கள் 13,143 மாதிரிகளை பரிசோதித்தோம்” எனக் கூறியது.

Categories

Tech |