தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இந்த கோடை மழையால் மக்கள் பெரும் மகிழ்ச்சியில் அடைந்தனர். சென்னையிலும் பல பகுதிகளில் நேற்று மாலை வேளையில் பலத்த மழை பெய்தது. இந்நிலையில் இன்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. மேலும் விருதுநகர், கன்னியாகுமரி, சிவகங்கை, தேனி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் ஆங்காங்கே மணிக்கு 30 – 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும். சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெரம்பலூரில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது. எனினும் மழை காரணமாக கொரோனா நோய்த் தொற்றுகள் பரவ அதிக வாய்ப்புள்ளதாகவும் மக்கள் கொஞ்சம் அச்சம் அடைந்துள்ளனர்.