கொரோனாவை தடுக்க 3 வாரங்கள் தேவைப்படுவதாக மாநிலங்களிலிருந்து தகவல் வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்கப்பட பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இதில் 199 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 504 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிரா – 1,364, தமிழகம் – 834, டெல்லி – 720, ராஜஸ்தான் – 463 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கொரோனாவை தடுக்க 3 வாரங்கள் தேவைப்படுவதாக மாநிலங்களிலிருந்து தகவல் வந்துள்ளது. ஊரடங்கை 100% முழுமையாக பின்பற்றப்படுவதை மாநில சுகாதார அமைச்சர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் இதில் தவறினால் கொரோனாவிற்கு எதிரான போரில் நமக்கு பெரும் பின்னடைவாக அமைந்துவிடும் என்றும், ஊரடங்கு என்பது சமூக ரீதியான தடுப்புமருந்து போன்றது என்றும் அவர் தெரிவித்தார்.